முன்னேற்ற பாதை நோக்கிய  யா/ உசன் இராமநாதன் ம. வி. இன் பயண வேண்டுகோள்

தென்மராட்சியின் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்த எமது பாடசாலை நாட்டின் சூழ்நிலை காரணமாக இழந்த  தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.  உசன் கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி அயற்கிராமங்களில் உள்ள சிறந்த மாணவர்கள் பலரும் தேடிவந்து கற்ற எமது பாடசாலை இன்று தனது நிலையை எண்ணிக் கண்ணீர் வடிக்கின்றது.

ஓர் சிறந்த பாடசாலையானது தனியே கல்வியை மட்டும் வழங்குவதோடமையாது பல்வேறுபட்ட இணைபாடவிதானச் செயற்பாடுகளிற்கும் களமமைத்து தனது மாணவர்களின் பல் திறன்சார் ஆற்றல்களை வெளிக்கொணரும் களமாகும்.  அவ்வகையில் மாணவர்களின் கல்விசார்,  திறன்சார் ஆற்றல்களை விருத்தி செய்யப் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கப் பாடசாலை பழைய மாணவர் சங்கம் முன்வந்துள்ளது. உலகெங்கும் வாழும் பாடசாலைப் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உதவியுடன் மேம்படுத்தலுக்கான செயற்றிட்டங்கள் திட்ட வரைவாக தயாரிக்கப்படுகின்றது.  இத் திட்ட வரைவானது 3வருட, 5வருட, 10 வருட செயற்றிட்டங்களை உள்ளடக்கியது. இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் திரு  சிவலோகநாதன் ஜெகன் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

முதற்கட்டமாக பாடசாலை விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கொள்வனவானது மைதானத்தின் வடக்குப்புறமாக உள்ள 20 பரப்புக் காணி விற்பனைக்கு வந்த நிலையில் உடனடியாகக் கொள்வனவு செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு Usan Foundation இன் தற்காலிக நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் , நடைபெறவுள்ள செயற்றிட்டங்களை வலுவுள்ளதாக  செயற்படுத்தவும் பாடசாலையை அனைவரும் விரும்பும் பாடசாலையாகவும் தென்மராட்சியில் சிறந்த பாடசாலையாகவும் மேம்படுத்தப் பாடசாலைச் சமூகமும் பாடசாலைப் பழைய மாணவர் சங்கமும் அனைத்து நல்லுள்ளங்களிடமும் உதவியை நாடி நிற்கின்றது.

Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *